72 லட்சம் தொழிலாளர்களின் வாரிசு பெயர் சேர்ப்பு
ஆன்லைனில் இ-நாமினி மூலம் மூலம் 72 லட்சம் தொழிலாளர்களின் வாரிசு பெயர் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் நீலம் ஷமி தெரிவித்து உள்ளார்.
கோவை
ஆன்லைனில் இ-நாமினி மூலம் மூலம் 72 லட்சம் தொழிலாளர்களின் வாரிசு பெயர் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் நீலம் ஷமி தெரிவித்து உள்ளார்.
கலந்துரையாடல் கூட்டம்
கோவை கோட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் கோவை, சேலம், நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கோவை -அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் நீலம் ஷமி தலைமை தாங்கினார்.
இதில் கோவை கோட்ட வருங்கால வைப்பு நிதி கூடுதல் ஆணை யாளர் அணில், கோவை மண்டல ஆணையாளர் சஞ்சய் உஷாஹரி, உதவி ஆணையாளர் சுரேஷ் உள்பட பல்வேறு மண்டலங்களின் ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 30 மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
வாரிசு பெயர் சேர்ப்பு
கூட்டத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இ-நாமினி உள்பட பல்வேறு சந்தேகங்களை நிறுவனங்களின் பிரதிநிதிகள் எழுப்பினர். அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். இது குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் நீலம் ஷமி கூறியதாவது:-
தொழிலாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் செய்து வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் வாரிசு நியமனத்தை (நாமினி) பதிவு செய்வதை எளிதாக்க இ-நாமினி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆன்லைனில் இதுவரை 72 லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வாரிசு பெயரை (இ-நாமினி) சேர்த்து பதிவு செய்து உள்ளனர். ஒரு நாளைக்கு 18 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை இ-நாமினி மூலம் வாரிசு பெயர்களை பதிவு செய்கின்றனர். தொழிலாளர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்திப்பதன் மூலம் அவர்களின் பல்வேறு கருத்துகளை அறிந்து கொள்ள முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.