ஆள்மாறாட்டம் மூலம் நிலம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் மூலம் நிலம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-24 12:37 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆள்மாறாட்டம்
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைதானேந்தலை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 61). இவரது தந்தை அம்பிகைநாதன் என்பவர் கடந்த 1964-ம் ஆண்டு முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 1 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை அருணாச்சலம் என்பவரிடம் இருந்து கிரையமாக வாங்கி உள்ளார். 
அதனை 1978-ம் ஆண்டு தனது மனைவி வள்ளித்தாயம்மாள் என்பவருக்க உயில் எழுதி கொடுத்து உள்ளார். 1991-ம் ஆண்டு வள்ளித்தாயம்மாள், தனது மகன்களான நடராஜப்பெருமாள், ஆதிநாராயணன் மற்றும் நமச்சிவாயம் ஆகியோருக்கு எழுதி கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் மீனாட்சி பட்டியை சேர்ந்த முருகன் மகன் அருணாசங்கர் (42) என்பவர், தனது நண்பர் ராமசாமி என்பவர் உதவியுடன், இறந்து போன தனது தந்தை முருகனை, அருணாசலம் என்று போலி வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து உள்ளார்.
அதன் பிறகு மோசடியாக ரூ.50 லட்சம் மதிப்பிலான 1 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை நில புரோக்கர் ராமசாமியின் மனைவி ராஜேசுவரி என்பவருக்கு 17.10.2020 அன்று கிரையம் செய்து உள்ளனர். 
தொடர்ந்து வில்லங்கத்தை ஏற்படுத்தி நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில், அவர்களுக்குள் மாற்றி, மாற்றி பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.
கைது
இதைத் தொடர்ந்து தனது நிலம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஆதிநாராயணன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். 
அதன்பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், சரவண சங்கர், விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து, அருணா சங்கரை போலீசார் கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்