மாற்றுத்திறனாளி குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
உபகரணம்
தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.16 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் 508 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி பேசினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, மத்திய அரசின் மாற்றுத்திறனுடையோருக்கான உள்ளடக்கிய கல்வித்திட்டம் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 759 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக அரசானது மாற்றுத்திறனுடையோருக்கு பல்வேறு சலுகைகள் அளித்து தொடர்ந்து மிகவும் கரிசனத்தோடு கவனித்து வருகிறது. இந்த ஆண்டு முதல் இந்த குழந்தைகள் பள்ளிக்கு வர இடர்பாடுகளாக உள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை நீக்கும் பொருட்டு மாதந்தோறும் ரூ.600 வழங்கப்படுகிறது. மேலும் பெண் குழந்தைகளுக்கு ரூ.200 கூடுதலாக வழங்கப்படுகிறது. வீட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பலதரப்பட்ட சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
ஒத்துழைப்பு
கடந்த ஆண்டு 2020-21-ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக வட்டாரத்தில் உள்ள இயன்முறை பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் நேரடியாக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்த தேவையான உபகரணங்களை கண்டறிந்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 508 பேருக்கு ரூ.16 லட்சத்து 82 ஆயிரத்து 345 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.பாலதண்டாயுதபாணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.