காசிமேட்டில் ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு

காசிமேட்டில் ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக காசிமேடு அண்ணா நகர் பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

Update: 2022-02-24 08:55 GMT
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்களை பதப்படுத்த உதவியாக ஐஸ் கட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள தொழிற்சாலையில் நேற்று திடீரென வாயு குழாயில் ஏற்பட்ட கசிவால், அமோனியா வாயு வேகமாக பரவியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக அமோனியா வாயு சுற்றுவட்டாரம் முழுவதும் வேகமாக பரவியதை தொடர்ந்து, காசிமேடு அண்ணா நகர் பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவரவே அங்கு விரைந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள், அமோனியா வாயு வெளியேறும் வால்வை விரைந்து மூடி சீர் செய்தனர். மேலும், தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுக இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் தலைமையில் போலீசார் மற்றும் ராயபுரம் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிற்சாலையில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி விட்டு தொழிற்சாலையை தற்காலிகமாக மூடினர்.

மேலும் செய்திகள்