ஸ்டார் குரூப்ஸ் நிறுவனர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை
ஸ்டார் குரூப்ஸ் நிறுவனர்-சகோதரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
வருமான வரித்துறை சோதனை
மண்டியா மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபரான அமிருல் முர்தசா மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து ஸ்டார் குரூப்ஸ் என்ற பெயரில் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட சில பகுதிகளில் ஓட்டல்கள், கோழிப்பண்ணை, பெட்ரோல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமிருலும், அவரது சகோதரர்களான ஹம்சா, ஷபாஸ், ஹிரோஸ் ஆகியோரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் நேற்று மண்டியா, நாகமங்களா, மைசூரு, பெங்களூருவில் உள்ள அமிருல் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.
வாடகை கார்களில்....
இந்த சோதனையின் போது சில சொத்து ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி எடுத்து சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல பெங்களூரு பனசங்கரி, பசவனகுடியில் இயங்கி வரும் கொமர்லா குழுத்திற்கு சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அங்கிருந்தும் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி எடுத்து சென்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோதனையை மேற்கொள்ள வருமான வரித்துறையினர் 10 வாடகை கார்களில் சென்றதாகவும் கூறப்படுகிறது.