ஹிஜாப்புக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த மாணவி, ஆதார் அட்டையில் ஹிஜாப் அணியவில்லை - அரசு கல்லூரிகள் சார்பில் ஆஜரான வக்கீல், ஐகோர்ட்டில் வாதம்
ஹிஜாப்புக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த மாணவி, ஆதார் அடையாள அட்டையில் ஹிஜாப் அணியவில்லை என்று கர்நாடக ஐகோர்ட்டில் அரசு கல்லூரிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.
பெங்களூரு:
ஹிஜாப் விவகார வழக்கு
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரதடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து அந்த கல்லூரியில்படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். அதே நேரத்தில் கர்நாடக அரசும் மாணவ, மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்துவர வேண்டும் என்றும், பிற ஆடைகள் அணியக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும் மனுக்களில் மாணவிகள் கூறி இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி நேற்று முன்தினம் தனது வாதத்தை முடித்திருந்தார்.
ஆதாரில் ஹிஜாப் இல்லை
இதையடுத்து 9-வது நாளான நேற்று ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன்பு நடைபெற்றது. ஏற்கனவே அரசு தரப்பிலான வாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அரசு கல்லூரிகள் சார்பில் நேற்று வாதம் நடந்தது. அரசு கல்லூரிகள் சார்பில் வக்கீல நாகானந்த் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர், அரசு கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்லூரியில் 100 மாணவிகள் இருந்தால், 5 பேர் மட்டுமே ஹிஜாப்புக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஹிஜாப் அணிந்து வெளியே செல்ல மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். ஹிஜாப் அணியும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மாணவி தனது ஆதார் அடையாள அட்டையில் ஹிஜாப் இல்லாத புகைப்படத்தில் இருக்கிறார்.
இன்று மீண்டும் விசாரணை
ஹிஜாப் அணிந்து கொள்ளாமல் வெளியே செல்ல மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் போது பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் மாணவி இருந்திருக்கிறார் என்று வாதிட்டார். இதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிா்ப்பு தெரிவித்தார்.
பின்னர் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி குறுக்கிட்டு, பள்ளியோ, கல்லூரிகளோ ஹிஜாப் அணிய இடைக்கால தடை விதித்திருப்பதால், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.