50 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி சேலம் மாநகராட்சி மேயராக மகுடம் சூடப்போவது யார்?

சேலம் மாநகராட்சியில் 50 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் புதிய மேயராக மகுடம் சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ளது.

Update: 2022-02-23 21:17 GMT
சேலம், 
60 வார்டுகள்
சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. சேலம் நகராட்சியாக இருந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
முதன் முதலாக 1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி மேயர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. அப்போது, மேயராக டாக்டர் சூடாமணி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து 2001-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ்குமார் மேயராக பதவி ஏற்றார். அதன்பிறகு 2006-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ரேகாபிரியதர்ஷினி மேயராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு சேலம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை கிடைத்தது.
அ.தி.மு.க. வசம்
அதைத்தொடர்ந்து 2011-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சவுண்டப்பன் மேயராக இருந்தார். அப்போது, அ.தி.மு.க. 51 வார்டுகளிலும், தி.மு.க. 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2016-ல் உள்ளாட்சி பதவிக்காலம் முடிந்தநிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 
இதனால் கடைசியாக மாநகராட்சி அ.தி.மு.க. வசம் இருந்தது. அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சியின் ஆணையாளர் பொறுப்பு வகித்து திட்டப்பணிகளை கவனித்து வருகிறார்.
46 வார்டுகளில் வெற்றி
இந்த நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. 48 வார்டுகளில் போட்டியிட்டது. இதில், 46 வார்டுகளில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-2, விடுதலை சிறுத்தைகள் கட்சி-1, மனித நேய மக்கள் கட்சி-1 வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டாலும் 7 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
தேர்தலுக்கு முன்பாகவே சேலம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி விடும் என்ற நம்பிக்கையில் தேர்தலுக்கு முன்பாகவே மேயர் பதவியை பிடிக்க சில வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இவர் தான் மேயர் வேட்பாளர் என்று கூறி  தி.மு.க.வினர் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.
மேயர் பதவிக்கு கடும் போட்டி
அந்த வரிசையில் உமாராணி, எஸ்.டி.கலையமுதன், ஜெயக்குமார், ராமச்சந்திரன், அசோகன், பன்னீர்செல்வம், குணசேகரன் ஆகியோரின் பெயர்கள் மேயர் வேட்பாளர்களின் பட்டியலில் அடிபடுகிறது என்றும், இவர்களில் ஒருவருக்கு மேயராகும் வாய்ப்பு உள்ளதாகவும் தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதனால் மேயர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் வெற்றி பெற்றவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், தி.மு.க. தலைமை தான் மேயர் வேட்பாளரின் பெயரை அறிவிக்கும். சேலம் மாநகராட்சி மேயர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வில் வெற்றி பெற்றவர்களில் (ஆண் அல்லது பெண்) யாராவது ஒருவருக்கு மேயராகும் வாய்ப்பு உண்டு.
மகுடம் சூடப்போவது யார்?
இதனால் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்றும், சிலர் மேயர் பதவி கிடைக்காவிட்டாலும் துணை மேயர் பதவியையாவது கைப்பற்ற வேண்டும் என்றும் கட்சி தலைமையை அணுகி வருகிறார்கள். சேலம் மாநகராட்சி மேயராக மகுடம் சூடப்போவது யார்? என்று அக்கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 2-ந் தேதி வெற்றி பெற்றவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார்கள். அதன்பிறகு 4-ந் தேதி மேயர், துணை மேயர் தேர்வு நடக்கும். எனவே, அதற்குள் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார்? என்ற விவரம் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகள்