சேலம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 27 வார்டுகளில் பா.ம.க. வெற்றி
சேலம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 27 வார்டுகளில் பா.ம.க. வெற்றி பெற்றது.
சேலம்,
இடங்கணசாலை நகராட்சி
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. சந்தித்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. இதனால் சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் பா.ம.க. தங்களது கட்சியின் வேட்பாளர்களை களம் இறக்கியது. இதேபோல் 6 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரசாரம் செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இடங்கணசாலை நகராட்சியில் 8 வார்டுகளையும், தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளையும் பா.ம.க. கைப்பற்றியது.
2-வது இடம் பிடித்தது
இதேபோல் மேச்சேரி பேரூராட்சியில் 3 வார்டுகளையும், நங்கவள்ளி, பி.என்.பட்டி, வீரக்கல்புதூர், தெடாவூர், வாழப்பாடி ஆகிய பேரூராட்சிகளில் தலா 2 வார்டுகளிலும் பா.ம.க. வெற்றி பெற்றது. அரசிராமணி, இளம்பிள்ளை ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு இடங்களிலும் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ம.க. ஒரு இடங்களையும் கைப்பற்றவில்லை. ஆனால் 13 மற்றும் 60-வது வார்டுகளில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர்கள் 2-வது இடம் பிடித்தனர். இதில் குறிப்பாக 13-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் தனசேகரன், அ.தி.மு.க. வேட்பாளரை 3-வது இடத்துக்கு தள்ளினார். இதுதவிர 60 வார்டுகளில் 21 இடங்களில் பா.ம.க. 3-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.