‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி தேவை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு கமுதி, பரமக்குடி, இளையான்குடி, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர் போன்ற வழிதடங்களின் வழியாகவும், முதுகுளத்தூருக்கு பரமக்குடி, தேவிபட்டினம், உப்பூர் வழிதடங்களின் வழியாகவும் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி இவ்வழிதடங்களில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்மோகன், தொண்டி.
கால்நடைகள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் செல்லும் மெயின் சாலையில் கால்நடைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இ்ந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தெருநாய்கள் தொல்ைல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நாய்கள் அட்டகாசத்தால் தெருவில் செல்லவே அச்சம் அடைகின்றனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ரோஷிணி, சிவகங்கை.
பயன்படுத்த முடியாத சாலை
மதுரை மாவட்டம் லட்சுமிபுரம் பஞ்சாயத்து சோலைபட்டி கிராமத்திலிருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் சாலை பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், சோலைபட்டி.