கடையம்: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலி
மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடையம் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது இரண்டாவது மகன் ராஜ்குமார் (வயது 20). ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ராஜ்குமார் நேற்று இரவு கடையம் நடுத்தெருவை சேர்ந்த தங்கராஜா மகன் ஸ்ரீதர் (20) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் பொட்டல்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீதரும் கல்லூரி மாணவர் ஆவார். மேலும் ராஜ்குமாரின் நண்பர். இருவரும் சென்ற மோட்டார்சைக்கிள் முதலியார்பட்டியில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு தனியார் மினி பஸ் மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது ராஜ்குமார் மீது பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்ரீதருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மினி பஸ்சை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர். ராஜ்குமார் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.