ஈரோடு மாநகராட்சி மேயர் யார்?

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க பெண் கவுன்சிலர்கள் போட்டியிடுகிறார்கள். புதிய மேயர் யார்? என்று ஈரோட்டு மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-02-23 20:23 GMT
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க பெண் கவுன்சிலர்கள் போட்டியிடுகிறார்கள். புதிய மேயர் யார்? என்று ஈரோட்டு மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பெண்களுக்கு ஒதுக்கீடு
ஈரோடு என்றால் பெரியார் மண். திராவிட இயக்கங்களின் குருகுலம். தன் வாழ்நாள் எல்லாம் பெண் விடுதலை, சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயம் என்ற கொள்கைக்காக போராட்டங்களும் பிரசாரங்களும் செய்த பெரியார் மண்ணின் மேயர் பதவி இடஒதுக்கீட்டில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே ஈரோட்டில் பெண் ஒருவர் மேயர் பதவியில் அமரப்போவது உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே 2011-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் நேரடி தேர்தல் மூலம் மேயர் தேர்ந்து எடுக்கப்பட்டதால், தேர்தலுக்கு பின்னர் மேயர் யார் என்ற கேள்வி எழுவில்லை.
கேள்விக்குறி
ஆனால், தற்போது நடந்து முடிந்து உள்ள தேர்தலில் கவுன்சிலர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வருகிற மார்ச் 2-ந் தேதி பதவி ஏற்கிறார்கள். பின்னர் மார்ச் 4-ந் தேதி கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்து எடுக்கிறார்கள். தற்போதைய நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு தி.மு.க.வை சேர்ந்த பெண் ஒருவர் மேயர் பதவி ஏற்க உள்ளார். ஆனால் அவர் யார் என்பதே தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க. 43 வார்டுகளை வென்று உள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் உதய சூரியன் சின்னத்தில் ஒரு வார்டில் வெற்றி பெற்று உள்ளது. எனவே 44 வார்டுகள் தி.மு.க.விடம் உள்ளன. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 3 வார்டுகளையும், ம.தி.மு.க. 1 வார்டையும் கைப்பற்றி இருக்கின்றன. எனவே கூட்டணியில் 48 வார்டுகள் தி.மு.க. வசம் இருக்கிறது. அ.தி.மு.க. 6 வார்டுகளையும், சுயேச்சைகள் 6 வார்டுகளையும் கைவசம் வைத்து உள்ளனர். எனவே அறுதிப்பெரும்பான்மை பெற்று தி.மு.க. மேயர் பதவியை பிடிக்கிறது.
முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்
தேர்தலுக்கு முன்பு சிலரது பெயர்கள் மேயர் பதவிக்கு பேசப்பட்டன. ஆனால், தேர்தல் காலத்திலும் அதற்கு பின்னரும் பல்வேறு பெயர்கள் மேயர் பதவிக்கான பட்டியலில் இடம் பிடித்து உள்ளது.
தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, தி.மு.க.வை பொறுத்தவரை வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகி இருக்கும் பெண்கள் அத்தனைபேரும் மேயர் பதவிக்கான வேட்பாளர்கள்தான். ஆனால் எங்கள் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்தான் மேயர் யார் என்பதை முடிவு செய்வார் என்றார்.
பட்டியல்
ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளர் எம்.சுப்பிரமணியத்தின் மனைவி நாகரத்தினம் 50-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆகி உள்ளார். கட்சியின் பொறுப்பு என்ற அடிப்படையில் நாகரத்தினத்தின் பெயர் மேயர் பதவி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
அதே நேரம் கடந்த 2011-ம் ஆண்டு நேரடி மேயர் தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஈரோடு மாநகராட்சி மேயர் வேட்பாளராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் செல்லப்பொன்னி. இவரது தந்தை அரங்கநாதன் ஈரோடு நகராட்சி தலைவராக பதவி வகித்தவர். செல்லப்பொன்னி தி.மு.க. கட்சியில் மிக நீண்ட காலமாக மாவட்ட செயலாளர் என்ற பதவியில் தொடர்ந்து இருந்து வருகிறார். இவர் 29-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக வெற்றி பெற்று இருக்கிறார். மேயர் பதவி போட்டியில் மீண்டும் செல்லப்பொன்னி பட்டியலில் இடம் பிடித்து உள்ளதாக தெரிகிறது.
போட்டி
இதுபோல் 49-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக தேர்வு பெற்று உள்ள கோகிலவாணி மணிராசு, மேயர் பட்டியலில் இடம் பிடித்து உள்ளார். இவர் 2011-ம் ஆண்டு ஈரோடு ஒன்றியக்குழு தலைவராக இருந்து 5 ஆண்டுகாலம் செயல்பட்டவர். ஈரோடு மாநகராட்சி அ.தி.மு.க. வசம் இருந்த காலக்கட்டத்தில், மாநகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சிகளின் தலைவராக தி.மு.க. சார்பில் பதவியில் இருந்தவர். ஏற்கனவே உள்ளாட்சி அமைப்பினை தலைவராக இருந்து நிர்வகித்தவர் என்ற கூடுதல் தகுதியுடன் கோகிலவாணி மணிராசு களத்தில் உள்ளார்.
இதுபோல் 30-வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் கீர்த்தனாவும் இந்த போட்டியில் உள்ளார். இவரது தந்தை திண்டல் குமாரசாமி மாவட்ட தி.மு.க. பொறுப்பில் நீண்டகாலம் பதவி வகித்து வருபவர். திண்டல் ஊராட்சியாக இருந்தபோது தலைவராக பணியில் இருந்தவர். இப்போது கீர்த்தனாவும் மேயர் பதவிக்கான போட்டியில் இணைந்து உள்ளார். 39-வது வார்டில் போட்டியிட்ட கீதாஞ்சலி செந்தில்குமார் ஈரோடு மாநகராட்சியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவருக்கும் தி.மு.க. கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு கட்சி தலைமை முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளது.
அமைச்சர் ஆலோசனை
இதுபோல் மண்டல தலைவர் பதவிக்கும் பலரும் காய்கள் நகர்த்தி வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்பம் தெரிவிப்பவர்களின் கோரிக்கையை தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி பெற்று, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில பொறுப்பாளர்களிடம் கலந்தாலோசனை செய்கிறார்.
அவர்கள் இறுதி செய்த பின்னர் தேர்ந்து எடுக்கப்பட்ட பட்டியல் முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட உள்ளது. அவர் அனைத்து வேட்பாளர்களின் தகுதியை பரிசீலனை செய்து மேயர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பார். முதல்-அமைச்சரின் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மாநகராட்சிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில் தலைமை அதிக அக்கறை செலுத்தி வருவதாக நிர்வாகி ஒருவர் கூறினார்.
எனவே தற்போதைய நிலையில் ஈரோடு மாநகராட்சியின் மேயர் யார் என்பது கேள்விக்குறியிலேயே உள்ளது.

மேலும் செய்திகள்