தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு 2-ந் தேதி பதவி ஏற்பு விழா
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா வருகிற 2-ந் தேதி நடக்கிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகரசபை, பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் 4-ந் தேதி நடைபெற உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா வருகிற 2-ந் தேதி நடக்கிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகரசபை, பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் 4-ந் தேதி நடைபெற உள்ளது.
979 கவுன்சிலர்கள் தேர்வு
குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கும், 4 நகராட்சிகளில் உள்ள 99 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 51 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 828 வார்டுகளில் 4 வார்டுகளின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 824 பேர் தேர்தல் மூலம் தேரவு செய்யப்பட்டார்கள். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 979 வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியில் விழா
இவர்களுக்கான பதவி ஏற்பு விழா வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அன்று அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 கவுன்சிலர்களுக்கும் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் புதிய கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதற்காக மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. மேலும் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
நகராட்சிகள்- பேரூராட்சிகள்
இதேபோல் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கவுன்சிலர்களுக்கும், குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கவுன்சிலர்களுக்கும், பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் 21 பேருக்கும், கொல்லங்கோடு நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் 33 பேரும் என 99 புதிய கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. அந்தந்த நகராட்சி ஆணையர்கள் புதிய கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளனர்.
இதேபோல் 51 பேரூராட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்ட 828 கவுன்சிலர்களுக்கும் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் அந்தந்த செயல் அலுவலர்கள் மூலம் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது. மொத்தம் 979 மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் வார்டு கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட இருக்கிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் அந்தந்த நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் செய்யப்பட்டு வருகிறது.
மறைமுகத் தேர்தல்
இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
அன்று காலை மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்களுக்கான தேர்தலும், பிற்பகலில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சிகளின் துணைத்தலைவர்கள், பேரூராட்சிகளின் துணைத்தலைவர்கள் ஆகியோருக்கான தேர்தலும் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.