குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவர்- மாணவி பலி. தற்கொலையா? என போலீசார் விசாரணை

குடியாத்தம் அருகே பள்ளி மாணவி, கல்லூரி மாணவர் ரெயிலில் அடிபட்டு பலியானார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-02-23 19:39 GMT
ஜோலார்பேட்டை

குடியாத்தம் அருகே பள்ளி மாணவி, கல்லூரி மாணவர் ரெயிலில் அடிபட்டு பலியானார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் அடிபட்டு பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காவனூர் ரெயில்நிலையம் அருகே 18 வயது உடைய வாலிபர் ஒருவரும், 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரும் நேற்று முன்தினம் இரவு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் இறந்து கிடந்த வாலிபர் மற்றும் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தற்கெலையா?

விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள சென்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரின் மகள் திரிஷா (வயது 16) என்பதும், இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. அதேபோன்று அந்த வாலிபர் கே.வி.குப்பம் அருகே உள்ள கீழ்ஆலத்தூர், காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த புண்ணியகோட்டி மகன் எஸ்வந்த் (18) என்பதும், இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. 

இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவுசெய்து, இருவரும் ஒரே இடத்தில் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதால் அவர்கள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில்மோதி இறந்தார்களா?, அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்