ஆம்பூரில் தோல் பொருட்கள் குடோனில் பயங்கர தீ. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ஆம்பூரில் தோல் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2022-02-23 19:39 GMT
ஆம்பூர்

ஆம்பூரில் தோல் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தோல் பொருட்கள் குடோன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் எம்.வி.சாமி நகர் பகுதியில் ரியாஸ், மோகன், முருகன், கலீல் சுபான் ஆகியோர் தனித்தனியாக 5-க்கும் மேற்பட்ட தோல் மற்றும் தோல் பொருட்கள் குடோன் நடத்தி வருகின்றனர். ஆம்பூர் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து பிரிக்கப்படும் தோல் கழிவுகளை இந்த குடோனுக்கு கொண்டு வந்து, அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் சூளைக்கு எரியூட்டுவதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

இதில் 30-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் குடோனை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் சில மணி நேரத்தில் குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. 

பயங்கர தீ

அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது தீ எரிவது தெரியவந்தது. உடனே அவர்கள் குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென கிடங்கு முழுவதும் எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 5-க்கும் மேற்பட்ட தோல் பொருட்கள் குடோனில் தீ பரவியதால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் நெருங்க முடியாமல் திணறினர். இதனால் அந்தப்பகுதி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த வாகனங்கள் மூலமும், தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
பொருட்கள் எரிந்து நாசம்

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தோல் மற்றும் தோல் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் தீ வைத்தார்களா என்பது குறித்து ஆம்பூர் டவுன்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்