குமரியில் 979-ல் 513 வார்டுகளில் வெற்றி வாகை சூடிய பெண்கள்
குமரியில் தேர்தல் களத்தில் ஆண்களை பின்னுக்குத்தள்ளி மொத்தம் உள்ள 979 வார்டுகளில் 513-ல் பெண்கள் வெற்றி வாகை சூடினர்.
நாகர்கோவில்:
குமரியில் தேர்தல் களத்தில் ஆண்களை பின்னுக்குத்தள்ளி மொத்தம் உள்ள 979 வார்டுகளில் 513-ல் பெண்கள் வெற்றி வாகை சூடினர்.
4.366 பேர் போட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 979 வார்டு கவுன்சிலர்களுக்கு இந்த தேர்தல் நடந்தது.
979 இடங்களுக்கு மொத்தம் 4,366 பேர் போட்டியிட்டனர். அதாவது 52 வார்டுகளைக் கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியில் 356 பேரும், 4 நகராட்சிகளுக்கு 437 பேரும், 51 பேரூராட்சிகளில் 3,573 பேரும் என மொத்தம் 4,366 பேர் போட்டியிட்டனர். பேரூராட்சிகளில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
50 சதவீதத்துக்கும் அதிகம்
இந்த தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் 50 சதவீத வார்டுகளில் பெண்கள் போட்டியிட்டனர். இதுமட்டுமின்றி பொது வார்டுகளிலும் பெண்கள் போட்டியிட்டனர். இதனால் 50 சதவீத பெண்கள் எண்ணிக்கைப்படி பார்த்தால் 485 பேர் மட்டுமே பெண்களாக இருக்க வேண்டும். ஆனால் அதைவிட அதிகமாக எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டனர். குறைவான எண்ணிக்கையில் ஆண்கள் களம் கண்டனர்.
அதேபோல் தேர்தல் முடிவிலும் பெண்களின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் பெண்கள் மட்டும் 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 25 வார்டுகளில் தான் ஆண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். இதேபோல் கொல்லங்கோடு நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 18 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலா 21 வார்டுகளைக் கொண்ட குழித்துறை, பத்மநாபபுரம் நகராட்சிகளில் தலா 12 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். 24 வார்டுகளைக் கொண்ட குளச்சல் நகராட்சியில் 12 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். நகராட்சிகளை பொறுத்தவரையில் குளச்சல் நகராட்சியில் மட்டும் சரிசமமாக 50 சதவீதம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 3 நகராட்சிகளிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 4 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 99 வார்டுகளில் 54 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
ருசிகர தேர்தல்
51 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 828 வார்டுகளில் 432 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே பேரூராட்சிகளிலும் ஆண்களைக்காட்டிலும் பெண்களின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. மொத்தம் 979 வார்டுகளில் 513 வார்டுகளில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி சாதனை படைத்திருக்கிறார்கள். எனவே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குமரி மாவட்டத்தில் ருசிகர தேர்தலாக அமைந்துள்ளது. பெண்களை அதிகார அரியணையில் இந்த தேர்தல் ஏற்றி உள்ளது.