1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் 1,264 மையங்களில் நடைபெறவுள்ளது என்ற மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-02-23 19:29 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் 1,264 மையங்களில் நடைபெறவுள்ளது என்ற மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரத்துறையின் மூலம் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை  கூட்டம் மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 27-ந்தேதி மாவட்டம் முழுவதும் 1,264 மையங்கள் மூலம் நடைபெற உள்ளன. இம்முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் மையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. அதேபோல், ரெட்கிராஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளும் பொதுமக்களின் தேவைக்காக சிறப்பு மையங்கள் அமைத்து செயல்பட உள்ளன. 
சொட்டு மருந்து முகாம்
மேலும் பொது சுகாதாரத்துறையுடன் சமூகநலத்துறை, ஊட்டச்சத்துத்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சித்துறை, கல்வித்துறை ஆகியத்துறைகள் ஒருங்கிணைந்து 5,060 பேர் பணியாற்ற உள்ளார்கள். எனவே, பொதுமக்கள் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து குழந்தைகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதிபாலன், துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) .ராம்கணேஷ், இணை இயக்குனர்(மருத்துவம்) டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர்(குடும்ப நலம்) டாக்டர் யோகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்