நகராட்சி தலைவர் கொலை வழக்கில்8 பேர் விடுதலை
நகராட்சி தலைவர் கொலை வழக்கில்8 பேர் விடுதலை
சிவகங்கை
சிவகங்கையில் நகராட்சி தலைவராக இருந்த முருகன் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி கார் வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து மற்றும் பாலா என்ற பாலச்சந்தர், சரவணன், மாமுண்டி, கண்ணன், பாண்டி மற்றொரு கண்ணன், முருக பாண்டி, மனோகரன், வீரமணி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீரபாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவையடுத்து வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட பாலா என்ற பாலச்சந்தர் மற்றும் முருக பாண்டி ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் மற்ற 8 பேர் மீது தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட செசன்சு நீதிபதி சுமதி சாய்பிரியா, அரசு தரப்பு சாட்சிகள் சரிவர நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கூறப்படுவதை தொடர்ந்து நேற்று கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.