1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
சரக்கு வாகனத்தில் 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி கிராமத்தில்
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வாகனத்தின் உரிமையாளரான மேலவரப்பன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் மோகன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கால்நடைகளுக்கு தீவனத்திற்காக அரைத்து அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்தி செல்வது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் அதிலிருந்த 1400 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.