கரூர் மாவட்டத்தில் 202 வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 202 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது.
கரூர்,
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி 48 வார்டுகள், குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகளில் 75 வார்டுகள், அரவக்குறிச்சி, புலியூர், கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, உப்பிடமங்கலம் ஆகிய 8 பேரூராட்சிகளில் 123 வார்டுகள் என மொத்தம் 246 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 5 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி இருந்தனர். மீதமுள்ள 241 வார்டுகளுக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
202 வார்டுகளை கைப்பற்றியது
இதில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, புகழூர், பள்ளப்பட்டி ஆகிய 3 நகராட்சிகள், உப்பிடமங்கலம், அரவக்குறிச்சி, புலியூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், மருதூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. இதில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 246 வார்டுகளில் 202 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
கரூர் மாநகராட்சியில் 42 வார்டுகள், 3 நகராட்சிகளில் 59 வார்டுகள், 8 பேரூராட்சிகளில் 101 வார்டுகள் என மொத்தம் 202 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க. 12 வார்டுகள்
அ.தி.மு.க. 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் கரூர் மாநகராட்சியில் 2 வார்டுகள், 3 நகராட்சிகளில் 2 வார்டுகள், 8 பேரூராட்சிகளில் 8 வார்டுகள் என மொத்தம் 12 வார்டுகளில் வெற்றிபெற்று உள்ளது. பா.ஜனதா 3 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 வார்டுகளிலும், இந்தியன் முஸ்லீம் லீக் ஒரு வார்டிலும், எஸ்.டி.பி.ஐ. ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 16 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர்.