கரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் யார்?
மெய்ப்பொருள் நகரமாம் வஞ்சி மாநகர் என்று அழைக்கப்படும் கரூர் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மேலும், சேர நாட்டின் தலை நகரமாக கரூர் விளங்கியது. சேரர்களை தொடர்ந்து சோழர்கள் அதன் பிறகு விஜயநகர பேரரசுகள் இதனையடுத்து திப்பு சுல்தான் ஆகியோர் கரூரை ஆட்சி செய்து வந்த நிலையில் அதன் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சென்றது.
கரூர்,
கரூர் மாநகராட்சி
அமராவதி ஆற்றின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கரூர், 1874-ம் ஆண்டு நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு 24-10-1969-ம் ஆண்டு முதல் 8-5-1983-ம் ஆண்டு வரை முதல்நிலை நகராட்சியாக இருந்தது. அதன் பிறகு இந்நகராட்சியினை தேர்வு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. சிறப்பு நிலை நகராட்சியாக 1988-ம் ஆண்டு முதல் தரம் உயர்த்தி 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்து வந்தது.
2011-ம் ஆண்டு கரூர் நகராட்சி 48 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வார்டுகள் மாற்றம் செய்யாமல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கரூர் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் தங்களுக்கு மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு இருகட்சிகளை சேர்ந்த பிரமுகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தங்களது மனைவியை வேட்பாளராக நிறுத்தி மேயர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தினர்.
முதல் மாநகராட்சி தேர்தல்
இந்தநிலையில் நேரடியாக மேயர் பதவி தேர்ந்தெடுக்கப்படாமல் கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகத்தேர்தலில் மேயர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிக வார்டுகளை கைப்பற்றும் கட்சி முதல் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றும் நிலை இருந்தது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் கடும் போட்டி நிலவியது.
இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி கரூர் மாநகராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., சுயேச்சைகள் என 266 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கரூர் மாநகராட்சியில் தி.மு.க. 42 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. இதனால் முதல் மாநகராட்சி மேயர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
மேயர் பதவி யாருக்கு?
கரூர் மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 24 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் முதல் மாநகராட்சி பெண் மேயர் பதவியை கைப்பற்ற இவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் தி.மு.க. மூத்த நிர்வாகியின் மனைவி, கரூர் மாநகராட்சியின் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மேலும் சில நிர்வாகிகளின் மனைவிகளின் பெயர்களும் மேயர் போட்டியில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தி.மு.க. தலைமை அறிவிக்கும் பெண் கவுன்சிலரே கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதனால் கரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் பதவியை அலங்கரிக்கப்போவது யார்? என்பதை அறிய அரசியல் கட்சியினர் மட்டுமின்றி கரூர் மாவட்ட மக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.