கிராம செவிலியரை கொலை செய்த 3 பேர் கைது

கிராம செவிலியரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-23 18:50 GMT
கிருஷ்ணராயபுரம், 
கிராம செவிலியர்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை அருகே வயலூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி வளர்மதி (வயது 58). இவர் பாப்பக்காப்பட்டி கிராமத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 19-ந் தேதி மதியம் பணி முடிந்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரும்பூதிபட்டி அருகே வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த வளர்மதியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வளர்மதி பரிதாபமாக இறந்தார்.
3 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய குட்டபட்டியை சேர்ந்த தக்காளி மனோகரன், கணக்கப்பிள்ளையூரை சேர்ந்த மருதமுத்து மற்றும் புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்