புதுக்கோட்டை நகராட்சியில் 188 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு தி.மு.க.-1, அ.தி.மு.க.-10
புதுக்கோட்டை நகராட்சியில் 188 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதில் தி.மு.க.வில் ஒருவரும், அ.தி.மு.க.வில் 10 பேரும் ஆவார்கள்.
புதுக்கோட்டை:
வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 27 இடங்களையும், அ.தி.மு.க. 8 வார்டுகளையும், அ.ம.மு.க., விஜய் மக்கள் இயக்கம் தலா ஒரு இடங்களையும் கைப்பற்றியது. சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் வெற்றி பெற்றனர். மொத்தம் 282 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் வைப்பு தொகையை (டெபாசிட்) கூட இழந்துள்ளனர். இதில் 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மற்றும் 8, 11, 19, 24, 28, 30, 34, 35, 36,37 ஆகிய 10 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதேபோல பா.ஜ.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 188 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
4-ந் தேதி மறைமுக தேர்தல்
நகராட்சி தேர்தலில் தி.மு.க. அதிக வார்டுகளை கைப்பற்றிய நிலையில் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றுகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க.விடம் இருந்த நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. வசமாக உள்ளது. வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் பலர் நேற்று சென்னை புறப்பட்டு சென்றனர். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற சென்றனர். கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது. நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.