வேலூர் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் 3 வார்டன்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
வேலூர் ஜெயிலில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் 3 வார்டன்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கீழ்வெட்டுவாணம் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்ற முத்துக்குமார் (வயது 27). கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி வேலூர் ஜெயில் காவலர் பயிற்சி பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் முத்துக்குமார் உள்பட 21 ஆயுள் தண்டனை கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது திடீரென முத்துக்குமார் தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின் ேபரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய முத்துக்குமாரை பிடிக்க ஜெயில் அதிகாரிகள் கொண்ட குழுவும், பாகாயம் போலீசார் அடங்கிய மற்றொரு குழுவும் அமைத்து தீவிர தேடுதல் ேவட்டை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் முத்துக்குமார் தப்பிச்சென்ற போது பணியில் இருந்த சுரேஷ், அன்பரசு உள்ளிட்ட 3 வார்டன்கள், ஒரு தூய்மைப் பணியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஜெயில் சூப்பிரண்டு ருக்மணிபிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.