தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-23 17:34 GMT
திருச்சி
தமிழில் ஊர் பெயர் பலகை வைக்கப்படுமா?
திருச்சி பொன்மலை ரெயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் சென்று வருகின்றன.அதில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் ரெயில் நிலையத்தில் ஊர் பெயர் பலகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.ஊர் பெயர் பலகை தமிழில் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே பயணிகளின் நலன் கருதி பொன்மலை ரெயில் நிலையத்தில் தமிழில் ஊர் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், தொட்டியம் வாணப்பட்டரை முதல் வளையல் காரத்தெரு வரை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.

பெருமாள் மலை கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்
 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மலை மீது பெருமாள்  மலை கோவில் உள்ளது. மலையில் ஏறுவதற்காக மொத்தம் 1570 படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகளில் பக்தர்கள்  இருபுறமும் பிடித்துக் கொண்டு ஏறி செல்வதற்கு இரும்பு கைப்பிடி குழாய்கள் அமைக்கப்படவில்லை. மேலும் எந்த ஒரு இடத்திலும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. மேலும் கீழே இருந்து மேலே மலைக்கோவிலுக்கு செல்வதற்கு  3.8 கிலோமீட்டர் தார் சாலை உள்ளது. அதன் வழியாக கார், வேன், இரு சக்கர வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. சாலையும் ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. எனவே கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரவும், தார்சாலையை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணன், துறையூர்

அரசு டவுன் பஸ் இயக்க  கோரிக்கை 
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கல்லக்குடி வழியாக சமத்துவபுரத்திற்கு கடந்த 13 ஆண்டுகளாக  2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது அந்த டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டேனியல், திருச்சி.  

மேலும் செய்திகள்