ரூ.41¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.41¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி வாரச்சந்தை நடைபெற்றது. இங்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயப்பாளையம் மற்றும் கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 334 விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கொட்டு ரகத்தை சேர்ந்த 339 பருத்தி மூட்டைகள், எல்.ஆர்.ஏ. ரகத்தை சேர்ந்த 1,048 பருத்தி மூட்டைகள் என மொத்தம் 1,387 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,389-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 8,709-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5,858-க்கும், குறைந்தபட்சமாக 3,669-க்கு விற்பனையானது. இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் போட்டி போட்டு வாங்கினர். இதன் மூலம் மொத்தம் ரூ.41 லட்சத்து 71 ஆயிரத்திற்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.