தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-23 17:18 GMT
புதுக்கோட்டை
குரங்குகள் தொல்லை
பெரம்பலூர் நகராட்சி  20-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள ஜன்னல் வழியாக குரங்குகள் உள்ளே புகுந்து கடும் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளில் உள்ள பொருட்களையும் தூக்கி சென்று விடுகிறது. மேலும் பொதுமக்களையும் சில நேரங்களில் கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், பெரம்பலூர்.

தமிழில் ஊர் பெயர் பலகை வைக்கப்படுமா?
திருச்சி பொன்மலை ரெயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் சென்று வருகின்றன.அதில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் ரெயில் நிலையத்தில் ஊர் பெயர் பலகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.ஊர் பெயர் பலகை தமிழில் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே பயணிகளின் நலன் கருதி பொன்மலை ரெயில் நிலையத்தில் தமிழில் ஊர் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

வேகத்தடை அமைக்க கோரிக்கை 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலையில் ஆவுடையார்கோவிலில் இருந்து அறந்தாங்கி வரும் பஸ் மற்றும் வாகனங்களும் அதேபோல் பெரிய கடைத்தெரு வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கடந்து ஆவுடையார்கோவில் செல்லும் வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. அதனால் தினசரி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எப்போதும் பரபரப்பாக இயங்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆவுடையார்கோவில் செல்லும் சாலையிலும், பெரிய கடைத்தெருவில் இருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வரும் சாலையிலும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்குமார், புதுக்கோட்டை.
கரூர் மாவட்டம், தோகைமலை பஸ் நிலையம் வடபுறத்தில் குளித்தலை -மணப்பாறை நெடுஞ்சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் முன்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் அடையாளத்திற்கு வெள்ளை வர்ணம் பூசாமல் இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.


ஆபத்தான மின்கம்பங்கள்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி சூரியநகரிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் எதிர்புறத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது.  இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதேபோல் வடசேரி அரசு உயர்நிலைப்பள்ளி அருகிலும், வடசேரி கோனார் நகர் பகுதியிலும்  4 மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொதுமக்கள், தோகைமலை, கரூர்.

மேலும் செய்திகள்