கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள 6 கடைகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்
கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள 6 கடைகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன், பண்ருட்டி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள 6 கடைகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
இதையடுத்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 100 லிட்டர் குளிர்பான பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கீழே கொட்டி அழித்தனர். இதையடுத்து அதிகாரிகள், கடை உரிமையாளர்களிடம், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.