நாகை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
வெளிப்பாளையம்;
காய்கறி சந்தைக்கு இடம் ஒதுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் காய்கறி மூட்டைகளுடன் மனு கொடுக்க மக்கள் குவிந்தனர்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் காய்கறி வகைகளை அணிந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து சென்றனர். இந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
பரவை சந்தை
வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் பகுதியில் சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பரவை காய்கறி சந்தை அமைந்துள்ளது. ஒரு சிலர் அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் காய்கறி சந்தை இயங்கியது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வேறு இடத்திற்கு இந்த சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த இடத்தில் பரவை சந்தை இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். 100-க்கும் அதிகமான கனரக வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்கிறது. எனவே இந்த இடத்தில் பரவை சந்தை செயல்பட அரசு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காய்கறி மூட்டைகளுடன் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.