திட்டக்குடி அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
திட்டக்குடி அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த தொளார் தெற்கு தெருவை சேர்ந்தவர் கரிகால்சோழன். டிரைவர். இவருடைய மனைவி ரமாராணி (வயது 32). இவர் தனது உறவினர் பெருமுளையை சேர்ந்த தங்கமணி மகள் அனிஷா (20) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ரமாராணிவீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அந்த மர்மநபர், ரமாராணியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த ரமாராணி, தனது தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
வலைவீச்சு
இந்த சத்தம் கேட்டு அனிஷா மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர் ரமாராணியின் 5 பவுன் சங்கிலி மற்றும் அனிஷாவின் கழுத்தில் கிடந்த வெள்ளி சங்கிலியையும் பறித்துக்கொண்டு பின்பக்கம் வழியாக தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.