வாலிபரை அரிவாளால் வெட்டி கொள்ளை முயற்சி
வாலிபரை அரிவாளால் வெட்டி கொள்ளை முயற்சி
குண்டடம்
குண்டடம் அருகே இரவில் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து வாலிபரை அரிவாளால் வெட்டி கொள்ளை முயற்சி நடந்தது. வாலிபரின் தாயார் சமயோகிதமாக செயல்பட்டதால் 3 ஆசாமிகள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தோட்டத்து வீடு
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே நால் ரோடு அரசமரத்து புதூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 73). விவசாயி. இவருடைய மனைவி ஜானகி (63). இவர்களுடைய மகன் சிவக்குமார் (33). மோட்டார் ரீவைண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்களது வீட்டின் அருகில் வேறு வீடுகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு வீட்டில் ஜானகியும், அவருடைய மகன் சிவக்குமார் மட்டுமே இருந்தனர். அப்போது திடீரென மின் விளக்குகள் அணைந்து போனது. இதனால் வீட்டைவிட்டு வெளியே வந்த சிவக்குமார் சற்று தொலைவில் இருந்த வீடுகளின் மின் விளக்குகள் எரிவதைப் பார்த்து பியூஸ் போயிருக்கலாம் என நினைத்து அதைப் பார்ப்பதற்காக வீட்டின் பின் பக்கம் உள்ள மின் மீட்டர் பெட்டியை பார்க்கச் சென்றார்.
வெட்டிய கொள்ளையர்கள்
அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் திடீரென்று அரிவாளால் சிவக்குமார் தலையின் பின் பகுதியில் வெட்டினர். இதில் நிலைகுலைந்து போன அவர் அம்மா என்று சத்தமிட்டவாறு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். மகனின் அபாயக்குரல் கேட்டு ஜானகி வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது கொள்ளையர்கள் ஜானகியின் கழுத்தில் அரிவாளை வைத்து வீட்டில் வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்து வா என மிரட்டினர். இதனால் பயந்து போன அவர் நகைகளை எடுத்து வருவதாக வீட்டிற்குள் சென்றார். பின்னர் சடாரென்று கதவை பூட்டிக்கொண்டு செல்போன் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை வீட்டிற்கு வெளியே நின்று கவனித்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் வீட்டின் கதவை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வருவதை பார்த்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் அங்கு அரிவாள் வெட்டுப்பட்டு காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, குண்டடம் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கை ேரகை நிபுணர்கள் வந்து கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் பதிவான கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் விசாரணை
கொள்ளையர்கள் வீட்டின் பின் புற காம்பவுண்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே வந்துள்ளனர். பின்னர் மின்சாரத்தை துண்டித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஜானகி சமயோகிதமாக செயல்பட்டதால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டதோடு, அசம்பாவிதமும் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.