மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்: வாலிபர் பரிதாப சாவு

ஸ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்

Update: 2022-02-23 16:16 GMT
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே  மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 
மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன் பண்ணையை சேர்ந்த முருகன் மகன பாலா (எ) பாதாளம் (வயது 18). இவர், தனது நண்பர்களான ஸ்ரீவைகுண்டம் வாய்க்கால்கரை தெருவைச் சேர்ந்த இசக்கி பாண்டி மகன் இசக்கிமுத்து (24),  ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் தெருவைச் சேர்ந்த காளி மகன் துரை (18) ஆகியோருடன் நேற்று ஏரலில் இருந்து ஸ்ரீவைகுண்டத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
ஆழ்வார்தோப்பு அருகே உள்ள இசக்கியம்மன் சாத்தான் கோவில் அருகே ஏரலை நோக்கி வாழைத்தார் ஏற்றி சென்ற லோடு வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பாலா உள்ளிட்ட மூவரும் தூக்கி வீசப்பட்டனர். 
வாய்க்காலில் விழுந்து சாவு
இதில் பாலா தாமரபரணி வடகால் வாய்க்காலில் விழுந்தார். மற்ற 2 பேரும் சாலையில் படுகாயங்களுடன் கிடந்தனர்.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார் ராஜாராபர்ட், சந்தன குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயங்களுடன் சாலையில் கிடந்த துரை, இசக்கிமுத்து ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், அந்த 2பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
இதற்கிடையில் வடகால் வாய்க்கால் தண்ணீரில் விழுந்த பாலாவை மீட்க தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாலாவை தேடினர். அவர் காயங்களுடன் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

மேலும் செய்திகள்