திண்டுக்கல் மாநகராட்சியில் பெரும்பான்மையை பிடித்த பெண்கள்
திண்டுக்கல் மாநகராட்சியில் 26 வார்டுகளில் வெற்றிவாகை சூடிய பெண்கள் பெரும்பான்மையை பிடித்தனர்.
திண்டுக்கல்:
அரசியலில் பெண்கள்
பெண்கள் தடம்பதிக்காத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு, அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். அதேநேரம், சில துறைகளில் பெண்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதையும் திறமை, அசாத்திய வெற்றி மூலம் பெண்கள் தகர்த்து வருகின்றனர். இதில் அரசியலை பொறுத்தவரை ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது.
அதிலும் மாபெரும் உச்சத்தை தொட்ட பெண்களும் உண்டு. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏராளமான பெண்கள் வேட்பாளர்களாக களம் இறங்கி வெற்றியை ருசித்தனர்.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியிலும் அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேச்சையாகவும் பெண்கள் போட்டியிட்டனர். எதிலும் சளைத்தவர்கள் இல்லை எனும் வகையில் பெண்கள் சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்தனர். அதன்மூலம் வெற்றியையும் கைப்பற்றினர்.
பெரும்பான்மையை பிடித்தனர்
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 30 பேரில் 19 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற 5 பேரில் 3 பேர் பெண்கள் ஆவர். மேலும் காங்கிரஸ் சார்பில் வென்ற 2 பேரில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வென்ற 3 பேரில் ஒருவரும் பெண் ஆவார். இதுதவிர சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற 5 பேரில் 2 பேர் பெண்கள் ஆவர்.
இதன்மூலம் திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 26 வார்டுகளில் பெண்கள் வெற்றிபெற்று உள்ளனர். இதன்மூலம் மாநகராட்சியில் பெரும்பான்மையை பெண்கள் பிடித்து இருக்கின்றனர். இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் மேயர் பதவியிலும் பெண் அமர இருப்பது மற்றொரு சிறப்பு ஆகும்.