சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

Update: 2022-02-23 15:28 GMT
திருவாரூர்:
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
சரக்கு ரெயில் போக்குவரத்து 
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் அகலப்பாதை ரெயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் ஒரே ஒரு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் திருவாரூரில் இருந்து காரைக்குடி வழி மார்க்கத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
திருவாரூரில் இருந்து காரைக்குடி வழியாக சிவகங்கைக்கு 1,232 டன் அரிசி பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்க அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து 21 பெட்டிகளில் அரிசியை ஏற்றி கொண்டு விருதுநகருக்கு சரக்கு ரெயில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புறப்பட்டது. இந்த சரக்கு ரெயிலை நிலைய மேலாளர் ராஜேஷ்குமார் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கூடுதல் விரைவு ரெயில் 
இதில் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன், ரெயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பெத்துராஜ், தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர் சுகுமாரன் உள்ளிட்ட ெரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், 
சரக்கு ரெயில் போக்குவரத்தினை தொடங்கி வைத்த தென்னக ெரயில்வேக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேேரத்தில் கேட் கீப்பர் பணியிடங்களை விரைந்து பூர்த்தி செய்து கூடுதல் விரைவு ரெயில் சேவைகளை உடனடியாக இயக்க வேண்டும் என்றார். 
---


மேலும் செய்திகள்