ஊட்டி பூங்காவில் ரோஜா செடிகளுக்கு 50 டன் இயற்கை உரம்

கோடை சீசனுக்கு ஊட்டி ரோஜா பூங்காவை தயார்படுத்த செடிகளுக்கு 50 டன் இயற்கை உரம் இடப்பட்டு வருகிறது.

Update: 2022-02-23 15:05 GMT
ஊட்டி

கோடை சீசனுக்கு ஊட்டி ரோஜா பூங்காவை தயார்படுத்த செடிகளுக்கு 50 டன் இயற்கை உரம் இடப்பட்டு வருகிறது.

ரோஜா பூங்கா 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பூங்காவில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4,201 ரோஜா ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவை கண்டு ரசிக்க நிலா மாடம், காட்சி முனைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

50 டன் இயற்கை உரம்

மேலும் அலங்கார செடிகள் அழகாக வெட்டி அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது. கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்கும் வகையில் இயற்கை உரம் இடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்காக ஊட்டி அருகே சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆட்டு சாணம் 50 டன் கொள்முதல் செய்து கொண்டு வந்து ரோஜா செடிகளுக்கு உரமாக இடப்பட்டு வருகிறது.

பூத்து குலுங்கும் மலர்கள்

தொடர்ந்து ஆட்டு சாணம் மண்ணோடு கலந்து செடிகளுக்கு ஊட்டமளிக்கும் வகையில் பணியாளர்கள் மண்ணை மாற்றி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து மாட்டு சாணம், காளான் கழிவுகள் உரமாக போடப் பட உள்ளது.

 களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.  தற்போது முக்கியமான பகுதிகளில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப் பட்டு உள்ளது. பிற 2 பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் செடிகள் கவாத்து செய்யப்பட்டது. அதில் ரோஜா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.

ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். நீலகிரியில் நடப்பாண்டில் கோடை சீசனையொட்டி தோட்டக்கலை பூங்காக்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்