அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது
மன்னார்குடி அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
படிக்கட்டில் ஏறி பயணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடிக்கு கடந்த 21-ந்தேதி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை மன்னார்குடி வடக்கு வடம்போக்கி தெருவை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்தார். நீடாமங்கலம் ெரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது, மூன்று வாலிபர்கள் பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தனர்.
டிரைவர் மீது தாக்குதல்
அப்போது மூன்று பேரையும் பஸ்சின் பின் பகுதிக்கு செல்லுமாறு டிரைவர் செந்தில் கூறினார். ஆனால் அவர்கள் 3 பேரும் அதை பொருட்படுத்தாமல் பயணம் செய்தனர். இதையடுத்து மன்னார்குடி தெப்பக்குளம் அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் ஏறினர். மீண்டும் 3 வாலிபர்களையும் படிக்கட்டில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு டிரைவர் செந்தில் அறிவுறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும் செந்திலை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் தேடிவந்தார்.
3 கல்லூரி மாணவர்கள் கைது
இந்தநிலையில் நேற்று மன்னார்குடி மேலபாலம் அருகே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நீடாமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20), கொட்டையூரை சேர்ந்த அஜய்குமார் (19) மற்றும் மணி (20) ஆகியோர் என்பதும், அவர்கள் டிரைவர் செந்திலை தாக்கியதும், மூன்று பேரும் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Reporter : M. DURAI Location : Tanjore - MANNARGUDI