சாலையோரம் பழுதாகி நின்ற வாகனம் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் பழுதாகி நின்ற வாகனம் மீது லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காட்டில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், நேற்று சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் நோக்கி இரும்பு பொருட்களை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மற்றொரு லாரி, மேற்கண்ட லாரியின் பின்னால் மோதியது. இதில் மோதிய லாரியின் டிரைவரான நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த வெங்கடேசலு (வயது44) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.