கோனியம்மன் கோவிலில் கொடியேற்றம்
தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
கோவை
கோவையில் பிரசித்திபெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
நேற்று இரவு கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதையொட்டி கோனியம்மன் தங்க கவசத்தில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கோனியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலின் முன்பு அக்கினி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. வாத்திய இசைகள் முழங்க இதில் அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் கோவிலை வலம் வந்து அக்னி கம்பம் நடப்பட்டது.
பின்பு கோனியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோனியம்மனை தரிசித்து சென்றனர்.