கோவை மாநகராட்சியில் முதன் முறையாக தி.மு.க. வெற்றிக்கொடி
கோவை மாநகராட்சி தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வார்டுகளை கைப்பற்றி முதன்முறையாக தி.மு.க. வெற்றிக்கொடியை நாட்டி உள்ளது.
கோவை
கோவை மாநகராட்சி தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வார்டுகளை கைப்பற்றி முதன்முறையாக தி.மு.க. வெற்றிக்கொடியை நாட்டி உள்ளது.
தேர்தல் முடிவுகள்
கோவை மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி தேர்தல் அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்பட்டது. 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில் தி.மு.க, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் அ.தி.மு.க., பா.ஜனதா, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், சுயேச்சை கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்கின.
தினந்தோறும் வார்டுகளில் திருவிழாபோல் களை கட்டிய தேர்தல் முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடந்தது. மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. அரசியல் கட்சிகளை சேர்ந்த முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் உள்ளேயும், வெளியேயும் அலைமோதியது. தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே திரண்டு நின்றிருந்தனர்.
இந்த வெற்றி போதுமா...
அடுத்தடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிமேல் வெற்றி என்கிற செய்தியை கேட்டு தி.மு.க.தொண்டர்கள் மேள, தாளம் முழங்க ஆடத்தொடங்கினர். வளாகத்துக்கு வெளியே தடாகம் ரோட்டில் திரண்டிருந்த தி.மு.க.வை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம்போட்டு வெற்றிக் கோஷங்களை எழுப்பினர்.
இது தவிர கோவை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்து காணப்பட்டனர். அங்குள்ள கிளை அலுவலகம், மற்றும் வேட்பாளர் அலுவலகம் முன்பு பட்டாசுகளை வெடித்து இந்த வெற்றி போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா என்று உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.
தி.மு.க.வெற்றிக்கொடி
பல இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த இந்த இமாலய வெற்றியை தி.மு.க.தொண்டர்கள் கொண்டாடுவதில் போட்டி போட்டனர். தி.மு.க. கூட்டணியை சேர்ந்த சிலர், வெற்றி பெற்ற தங்களுடைய வார்டுகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டில் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணியில், கோவை மாநகராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் காங்கிரசுக்கு மேயர் பொறுப்பு கிடைத்தது.
தற்போது கூட்டணி அமைத்து இருந்தாலும், முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் கோவை மாநகராட்சியில் தி.மு.க.வெற்றிக்கொடியை நாட்டி உள்ளது. இந்த வெற்றியின் உற்சாகம்தான் தி.மு.க. தொண்டர்களை நேற்று திக்குமுக்காடவைத்தது.