அதிக வார்டுகளை பிடித்ததில் பா.ஜ.க.வுக்கு 2-வது இடம்:குமரியில் 37 பேரூராட்சிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றுகிறது
குமரியில் 37 பேரூராட்சிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றுகிறது. அ.தி.மு.க. எந்தவொரு பேரூராட்சியிலும் பெரும்பான்மையை பெறவில்லை. மாவட்டம் முழுவதும் அதிக வார்டுகள் வெற்றியில் பா.ஜ.க. 2-வது இடம் பிடித்துள்ளது.
நாகர்கோவில்,
குமரியில் 37 பேரூராட்சிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றுகிறது. அ.தி.மு.க. எந்தவொரு பேரூராட்சியிலும் பெரும்பான்மையை பெறவில்லை. மாவட்டம் முழுவதும் அதிக வார்டுகள் வெற்றியில் பா.ஜ.க. 2-வது இடம் பிடித்துள்ளது.
பேரூராட்சிகள்
குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகளில் 828 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் ஆண் வாக்காளர்கள் 3,38,746 பேரும், பெண் வாக்காளர்கள் 3,41,425 பேரும், திருநங்கைகள் 46 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரத்து 217 வாக்காளர்கள் உள்ளனர்.
828 வார்டுகளில் 4 வார்டுகளின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனால் 824 வார்டுகளுக்கு 3,573 பேர் போட்டியிட்டனர். இவற்றில் ஆண் வாக்காளர்கள் 2,22, 346 பேரும், பெண் வாக்காளர்கள் 2,41,658 பேரும், திருநங்கைகள் 5 பேரும் என மொத்தம் 4,64,009 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு சதவீதம் 68.21 ஆகும்.
37 பேரூராட்சிகளில் தி.மு.க.
நேற்று வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் 37 பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
மருங்கூரில் அ.தி.மு.க. 15 வார்டுகளில் 6 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 4 இடங்களிலும், பா.ஜ.க. 1, சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மருங்கூர் பேரூராட்சியை சுயேச்சைகள் ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதேபோல் தேரூர் பேரூராட்சியில் பா.ஜ.க. ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
மண்டைக்காடு, இரணியல் பேரூராட்சிகளை பா.ஜ.க. பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. அதே சமயத்தில் வெள்ளிமலை, வில்லுக்குறி, கணபதிபுரம், மயிலாடி, உள்ளிட்ட பேரூராட்சிகளை சுயேச்சை, அ.தி.மு.க. ஆதரவுடன் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
இழுபறி-சுயேச்சை ஆதிக்கம்
திற்பரப்பு, நல்லூர், தென்தாமரைகுளம் பேரூராட்சிகளை கைப்பற்றுவதில் இழுபறி உள்ளது. புத்தளம் பேரூராட்சியில் 6 சுயேச்சை வேட்பாளர்கள், அகஸ்தீஸ்வரத்தில் 7 சுயேச்சை வேட்பாளர்கள், கப்பியறையில் 6 சுயேச்சை வேட்பாளர்கள், ஆரல்வாய்மொழியில் 11 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த 4 பேரூராட்சிகளில் சுயேச்சை வேட்பாளர்களின் கையே ஓங்கி உள்ளது. அவர்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ அந்த கட்சியே பேரூராட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது.
வார்டு வாரியாக வெற்றி
குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளில் தி.மு.க. 229 வார்டுகளிலும், காங்கிரஸ் 163 வார்டுகளிலும், பா.ஜ.க. 168 வார்டுகளிலும், அ.தி.மு.க. 64 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 42 வார்டுகளிலும், தே.மு.தி.க. 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 155 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் தி.மு.க. அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.