தேர்தலில் மனைவி தோற்றதால் கணவர் திடீர் தற்கொலை
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மனைவி தேர்தலில் தோற்றதால் அவருடைய கணவர் மனவருத்தம் அடைந்து திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
சாத்தூர்,
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மனைவி தேர்தலில் தோற்றதால் அவருடைய கணவர் மனவருத்தம் அடைந்து திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
வேட்பாளரின் கணவர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் சுகுணாதேவி (வயது 52) போட்டியிட்டார். இவருடைய கணவர் நாகராஜன் (57). இவர் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று சாத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தனது வார்டில் 380 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுகுணாதேவி, தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இதனால் மனவருத்தம் அடைந்த அவருடைய கணவர் நாகராஜன், தனது வீட்டுக்கு சென்று திடீரென விஷம் குடித்தார்.
பரிதாப சாவு
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார், நாகராஜீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.