பா.ஜனதா நிர்வாகி கொலை: ஈரோடு சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு
பா.ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக போலீசார் ஈரோடு சென்று விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்
நெல்லை:
பா.ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக போலீசார் ஈரோடு சென்று விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதை மங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). பா.ஜனதா மாவட்ட வர்த்தக அணி துணை தலைவரான இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் செந்தில்குமார் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் பகுதியில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், மர்ம கும்பல் செந்தில்குமாரை காரில் கடத்தி கொலை செய்து வெள்ள நீர் கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது.
ஈரோடு செல்ல முடிவு
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார், செந்தில்குமாரின் நண்பரான சீனிவாசனை பிடித்து 2 நாட்களாக துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து செந்தில்குமாரின் கொலையில் துப்பு துலக்குவதற்காக போலீசார் ஈரோடு செல்ல முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் ஈரோடு சென்று விசாரணையை தொடங்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.