என்ஜினீயரிங், கலை அறிவியல் படிப்புகளுக்கு இறுதிகட்ட சென்டாக் கலந்தாய்வு
கல்லூரிகளில் காலியாக உள்ள என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
புதுச்சேரி, பிப்.23-
கல்லூரிகளில் காலியாக உள்ள என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்தேச பட்டியல்
நீட் நுழைவுத்தேர்வு அல்லாத பாடப்பிரிவுகளான பி.டெக்., பி.எஸ்சி அக்ரி, பி.எஸ்சி. நர்சிங், பி.பி.டி, பி.பார்ம், பி.ஏ.எல்.எல்.பி. (5 ஆண்டு) மற்றும் டிப்ளமோ படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், வணிகவியல் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான உத்தேச பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) காலை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. மதியம் பி.எஸ்.சி. அக்ரி, தொடர்ந்து பி.பார்ம் படிப்பிற்கும் நடக்கிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) உயிரியல் தொடர்பான படிப்புகளுக்கும், 26-ந் தேதி என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் (அரசு ஒதுக்கீடு), 27-ந் தேதி காலை பி.ஏ.எல்.எல்.பி., மாலையில் டிப்ளமோ படிப்புகளுக்கும், 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கலை அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
விருப்பம் தெரிவிக்க வேண்டும்
இந்த கலந்தாய்வு புதுவை என்ஜினீயரிங் கல்லூரி வளாகம், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, ஏனாம் அரசு கல்லூரி, மாகி மகாத்மாகாந்தி அரசு கல்லூரி ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் சென்டாக் டேஸ் போர்டுக்கு சென்று தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
காலி இடங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக வர வேண்டும். விண்ணப்ப படிவம், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், இருப்பிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சாதி சான்றிதழ்களை உடன் எடுத்துவரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
____