உள்ளூர் கலைஞர்களை ஊக்கப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் உயரும்
உள்ளூர் கலைஞர்களை ஊக்கப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் உயரும் -கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
புதுச்சேரி, பிப்.23-
கைவினை பொருட்களை வாங்கி உள்ளூர் கலைஞர்களை ஊக்கப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நிறைவு விழா
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பில் கைவினை, உணவு மற்றும் கலாசாரம் ஆகியவை இணைந்த கண்காட்சி (ஹுனர் ஹாட்) கடந்த 11-ந் தேதி புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு மத்திய சிறுபான்மையினர் நல மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதாரம் உயரும்
நாட்டில் பல்வேறு மொழிகள் பேசினாலும் இந்திய மக்களின் சிந்தனை ஒன்றே என்று மகாகவி பாரதி பாடியதை இந்த கண்காட்சி நமக்கு உணர்த்துகிறது. பிரதமர் மோடி ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் மூலமாக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவில் தயாராகும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்ப கலைஞர் முனுசாமி போன்றவர்கள் புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். பிரதமர் மோடி புதுவைக்கு வந்த போது சுடுகளிமண் சிற்பத்தை பரிசாக வழங்கினோம்.
இந்த கண்காட்சி 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது புதுவையில் நடத்தப்பட்டுள்ளது. வேறு எந்த நகரத்திலும் 2-வது முறையாக இந்த கண்காட்சி நடத்தப்படவில்லை. பொதுமக்கள் கைவினை பொருட்களை வாங்கி உள்ளூர் கலைஞர்களை ஊக்கப்படுத்தினால் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கசாமி
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
கைவினை பொருட்கள், கலாசாரம் மற்றும் பல மாநில உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த கண்காட்சியின் நோக்கம். புதுச்சேரி மக்கள் மிகுந்த ஆர்வமுடன் இந்த கண்காட்சியை பார்த்து ரசித்தனர். என்னை பார்க்கும் பொதுமக்கள் சிலர் இந்த கண்காட்சியை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நானும் இது தொடர்பாக மத்திய மந்திரியிடம் பேசினேன். ஆனால் பல மாநிலங்களில் இந்த கண்காட்சி நடத்த வேண்டும் என்பதால் இனி வரும் காலங்களில் கூடுதலாக நடத்தப்படும் என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு ஒரு முறை சுற்றுலா வருபவர்கள் மீண்டும், மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றனர். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி மக்கள் கைவினை கலைஞர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளித்துள்ளனர். இந்த கண்காட்சியை சுமார் 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்
புதுவையில் கொரோனா காலத்தில் கவர்னர் வழிகாட்டுதலின் படி நாம் அதனை எளிமையாக எதிர்கொண்டோம். தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய். சரவணன் குமார், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அரசு செயலாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.