புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

Update: 2022-02-22 19:15 GMT
புவனகிரி, 

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் புவனகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.  அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் முதல் 3 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்து, வாக்குகளை எண்ண முயன்றனர். ஆனால் அந்த எந்திரம் திடீரென பழுதானதால், 4-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பழுது பார்க்க முயன்றனர்.  அவர்கள் நீண்ட நேரம் முயற்சி செய்தும், பழுதை சரிபார்க்க முடியவில்லை. இதனால் பிற வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து, முடிவு அறிவிக்கப்பட்டது. ஆனால் 4-வது வார்டுக்கான வாக்குகள் மட்டும் எண்ணப்படாமல் உள்ளது. 

இதனால் எந்திரத்தை பழுது பார்ப்பதற்காக மங்கலம்பேட்டையில் இருந்த பெல் நிறுவன ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் நீ்ண்ட நேரமாகியும் வரவில்லை. இதற்கிடையே 4-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் அருள்குமார் சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மதியம் 3 மணி வரை, வாக்குப்பதிவு எந்திரத்தை பழுது பார்க்க ஊழியர்கள் யாரும் வரவில்லை. இதனால் வாக்கு எண்ணும் மையம் பரபரப்புடன் காணப்பட்டது. 

மேலும் செய்திகள்