தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-02-22 19:12 GMT
திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா பெருகமணி பழையூர் கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தை உரசி கொண்டு வளரும் தேக்குமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய  அதிகாரிகள் மின்கம்பத்தை உரசி கொண்டு இருந்த தேக்குமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். 
பொதுமக்கள், திருச்சி.

மங்களம் அருவியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சமலையில் உள்ளது மங்களம் அருவி. இப்பகுதியில் ஒரு முறை மழை பெய்து நின்று விட்டால் தொடர்ந்து 90 நாட்களுக்கு மேல் தண்ணீர் வரும்.  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு பாதுகாப்பு கம்பிகள்  பொருத்தப்படவில்லை. மேலும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மங்களம் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணன் நடேசன், திருச்சி.

ஆபத்தான சாக்கடை கால்வாய்
திருச்சி மாவட்டம், மேலப்புதூரிலிருந்து ஒத்தக்கடை செல்லும் சாலையில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியின் முகப்பு வாயிலில் மின்கம்பத்தை ஒட்டி செல்லும் சாக்கடை கால்வாய் வளைவாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சில நேரங்களில் பள்ளிச்செல்லும் மாணவர்கள், சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழும் நிலையில் படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த இடத்தில் தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
ஸ்டீவன்சன், திருச்சி.

மேலும் செய்திகள்