ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. 7 பேரூராட்சி களில் 4-ல் தி.மு.க. வெற்றி பெற்றது.

Update: 2022-02-22 19:06 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது
ராமநாதபுரம், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. 7 பேரூராட்சி களில் 4-ல் தி.மு.க. வெற்றி பெற்றது.
வாக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல் குடி மற்றும் தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன.
 இதன்படி ராமநாதபுரம் நகராட்சி, ராமேசுவரம் நகராட்சி, கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சி, தொண்டி பேரூராட்சி மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியிலும், பரமக்குடி நகராட்சி, அபிராமம் பேரூராட்சி, முதுகுளத்தூர் பேரூராட்சி, கமுதி பேரூராட்சி, சாயல்குடி பேரூராட்சி உட்பட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கான வாக்கு எண்ணிக்கை பரமக்குடி அழகப்பா பல்கலைகழக உறுப்பு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியிலும் நடைபெற்றது. 
ராமநாதபுரம் நகராட்சி
இதன்படி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் 7-வது வார்டு பிரவீன் தங்கம் மற்றும் 29- வது வார்டு காயத்ரி கார்மேகம் ஆகிய தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 31 வார்டுகளில் போட்டி யிட்டவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 33 வார்டுகளை கொண்ட ராமநாதபுரம் நகராட்சியில் தி.மு.க. 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், பா.ஜ.க. அ.ம.மு.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் ம.ம.க. தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
கீழக்கரை 
கீழக்கரை நகராட்சியில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க., சி.பி.ஐ.எம்., எஸ்.டி.பி.ஐ ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ராமேசுவரம்
 ராமேசுவரம் நகராட்சியில் தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயெட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 
பரமக்குடி
பரமக்குடி நகராட்சியில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும். ம.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆகமொத்தம் 4 நகராட்சிகளிலும் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று முழு வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
பேரூராட்சி
பேரூராட்சிகளை பொறுத்தவரை 7 பேரூராட்சிகளில் 108 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடந்த தேர்தலில் சாயல்குடி பேரூராட்சியில் 15 பதவிகளில் அனைத்தையும் சுயேட்சை உறுப்பினர்கள் வெற்றி பெற்று தக்க வைத்துள்ளனர். அபிராமம் பேரூராட்சியில் 15 உறுப்பினர் பதவிகளில் 13 இடங்களில் தி.மு.க.வும், அ.தி.மு.க.- 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மண்டபம் பேரூராட்சியில் 18 உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. -12 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேட்சை- 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலத்தில் 15 உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. 13 இடங்களிலும், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 உறுப்பினர் பதவிகளில் தி.மு.க.- 5 இடங்களிலும், அ.தி.மு.க.- 2 இடங்களிலும், அ.ம.மு.க. -2 இடங்களிலும், சுயேச்சைகள்- 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கமுதி பேரூராட்சியில் 15 பதவிகளில் சுயேச்சைகள்- 14 இடங்களிலும் பா.ஜ.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 
தொண்டி பேரூராட்சியில் 9 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேச்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்படி 7 பேரூராட்சிகளில் 4-ல் தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் செய்திகள்