அதிமுக பா ஜனதா வேட்பாளர்கள் திடீர் தர்ணா

கோவை மாநகராட்சி 32-வது வார்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றியதாக அ.தி.மு.க. பா.ஜனதா வேட்பாளர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-22 18:54 GMT
கோவை

கோவை மாநகராட்சி 32-வது வார்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றியதாக அ.தி.மு.க. பா.ஜனதா வேட்பாளர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

32-வது வார்டு

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அப்போது கோவை மாநகராட்சி 32- வது வார்டில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது.
 அப்போது அந்த வார்டில் பதிவான வாக்குப்பதிவு எந்திரத்தில், சீல் சரியாக வைக்கவில்லை, அந்த முகவர்களின் கையெழுத்து அதில் இடம் பெறவில்லை என்றும், இந்த வெற்றியை ரத்து செய்து மறு தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று கோரி வாக்கு எண்ணிக்கையின் போது அ.தி.மு.க., பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் கூச்சலிட்டனர். 
ஆனாலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. அதில் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன் 5,330 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் முருக பாபு 2,488 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். 

திடீர் தர்ணா போராட்டம்

இந்த நிலையில் தோல்வியடைந்த அ.தி.மு.க. , பா.ஜனதா உட்பட பிற கட்சி வேட்பாளர்கள் வாக்கு வாக்கு எண்ணும் இடத்திலிருந்து வெளியே வந்து கல்லூரி வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 32-வது வார்டில் 4 வாக்குப்பதிவு எந்திரத்தில் சீல் சரியாக வைக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்த ஆவணத்தில் முகவர்களின் கையெழுத்து மாறி உள்ளது. இதனால்  4 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தி.மு.க.வினர் மாற்றி உள்ளனர். எனவே இந்த 32-வது வார்டு தேர்தலை ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்