நீலகிரியில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்தது

நீலகிரியில் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்தது.;

Update: 2022-02-22 17:14 GMT
ஊட்டி

நீலகிரியில் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்தது. 

உள்ளாட்சி தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது.

 அதிகரட்டியில் வார்டு 12, பிக்கட்டியில் வார்டு 10, கேத்தி பேரூராட்சியில் வார்டு 7-ல் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர் என 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 13 இடங்களில் 15 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வார்டு வாரியாக தரையில் அடுக்கி வைத்து பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. 

15 உள்ளாட்சி அமைப்புகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையங்களில் மேஜைகள் போடப்பட்டு தயார்படுத்தப்பட்டு இருந்தது. 

ஊட்டி நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித், தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் 2 பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு இருந்த சீல்கள் அகற்றப்பட்டது.

தபால் வாக்குகள்

காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை 15 நிமிடம் தாமதமாக தொடங்கியது. முதலில் தபால் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீல் அகற்றப்பட்டது. ஊட்டி நகராட்சியில் 45 தபால் வாக்குகள் பதிவானது. 11 பேரூராட்சிகளில் 213 தபால் வாக்குகள் பெறப்பட்டது. 

இதில் 23 தள்ளுபடி செய்யப்பட்டு, 190 தபால் வாக்குகள் ஏற்கப்பட்டது. பின்னர் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் பெட்டியில் கொட்டப்பட்டது. அதனை வார்டு வாரியாக பிரித்து வாக்கு எண்ணும் அலுவலர்கள் முகவர்களிடம் காண்பித்து ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

வாக்குகள் எண்ணுவதை நேரடியாக முகவர்கள் பார்க்கும் பொருட்டு கம்பி வலைகள் அமைக்கப்பட்டு இருந்தது. தபால் வாக்குகள் எண்ண ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் தலா ஒரு மேஜை போடப்பட்டது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

 வாக்கு எண்ணும் அலுவலர்கள் பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வந்து மேஜையில் வைத்தனர். எந்திரத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றிய பின்னர், அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

ஒரு மேஜையில் 3 பேர் பணியில் இருந்தனர். எந்திரத்தில் பதிவான வாக்குகளை வேட்பாளர்கள், முகவர்களுக்கு காண்பித்து எண்ணப்பட்டது. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் வேட்பாளர் பெற்ற வாக்குகள் விவரம் ஒலிபெருக்கி மூலம் ஊட்டி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் அறிவித்தார். 

மேலும் அதன் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டது. இதனை நுண் பார்வையாளர்கள் கண்காணித்தனர். வாக்கு எண்ணும் அறைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையை யொட்டி நுழைவுவாயில் முன்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் அனுமதி அட்டையை காண்பித்து பதிவு செய்த பின்னர் போலீசார் அவர்களை உள்ளே அனுப்பினர். வார்டு வாரியாக வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதேபோல் பிற 12 இடங்களில் உள்ள 14 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணும் பணி அமைதியாக நடந்து முடிந்தது. 

மேலும் செய்திகள்