பீமா கோரேகாவ் வன்முறை தொடர்பான விசாரணைக்கு சரத்பவார் ஆஜராகவில்லை-நவாப் மாலிக் தகவல்

பீமா கோரேகாவ் வன்முறை தொடர்பான ஆணையத்தின் விசாரணைக்கு சரத்பவார் தற்போது ஆஜராகவில்லை என நவாப் மாலிக் கூறியுள்ளார்.

Update: 2022-02-22 15:05 GMT
படம்
மும்பை, 

பீமா கோரேகாவ் வன்முறை தொடர்பான ஆணையத்தின் விசாரணைக்கு சரத்பவார் தற்போது ஆஜராகவில்லை என நவாப் மாலிக் கூறியுள்ளார்.

பீமா கோரேகாவ் வன்முறை
புனே மாவட்டம் பீமா கோரேகாவில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 10 போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் பீமா கோரேகாவில் எல்கர் பரிஷத் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் வன்முறை தூண்டிவிடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பீமா கோரேகாவ் வன்முறை குறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வன்முறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு கடந்த 2020-ம் ஆண்டு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மீண்டும் சம்மன்
இந்தநிலையில் இன்று (23-ந் தேதி) மற்றும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் சரத்பவாருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் தற்போது தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என சரத்பவார் ஆணையத்தில் மனு அளித்து உள்ளார். 
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், "விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் அழைப்புவிடுத்து இருந்தது. ஆனால் இந்த முறை விசாரணைக்கு வர முடியாது என்பதை அவர் ஆணையத்தில் கூறிவிட்டார். தனது வாக்குமூலத்தை பின்னர் கூறுவதாகவும் சரத்பவார் ஆணையத்திடம் கூறியுள்ளார். கண்டிப்பாக அவர் அடுத்துவரும் நாட்களில் விசாரணைக்கு ஆஜராவார்" என்றார்.

மேலும் செய்திகள்