அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகை
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூர் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் மாவட்ட குழு உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகியுமான நீலவானத்து நிலவன் தலைமையில், வக்கீல்கள் கண்ணதாசன், கோபி, நரசிம்மன், குருவராஜ கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் நேசகுமார், ஒன்றிய செயலாளர் சம்பத், வார்டு உறுப்பினர்கள் ஜெயம்மாள் மற்றும் திரளான இருளர் இன மக்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பட்டா வழங்க வேண்டும்
பின்னர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், குருவராஜ கண்டிகை கிராமத்தில் திரளான இருளர் இன மக்கள் காலம் காலமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனைபட்டா கேட்டு 40-க்கும் மேற்பட்டோர் பலமுறை மனு அளித்து இருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக நாங்கள் வீட்டுமனை பட்டா பெற முடியாமல் அவதியுற்று வருகிறோம். எனவே காலதாமதம் செய்யாமல் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
மேலும் குருவராஜ கண்டிகையில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் கறவை மாடுகள் வழங்க வேண்டும். கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.